அதிமுகவில் இணைவதற்கு நான் தூது விட்டேனா..? இபிஎஸ் சொல்வது அண்டப் புழுகு! ஆகாச புழுகு! கொந்தளித்த ஓபிஎஸ்.!

திமுகவுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில்;- ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும்போது சேவல் சின்னத்திற்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓபிஎஸ். மூன்று முறை முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்.

என்னிடம் கட்சிக்கு வந்து விடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது அவர் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. தேர்தல் ஆணையம் தெளிவான தீர்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. ஓபிஎஸ் இல்லை, எந்த கொம்பனாலும் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்று இபிஎஸ் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது.இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக இபிஎஸ் கூறுவது பொய்யான தகவல். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக இருக்கிறார்.திருச்சி மாநாட்டுக்குப் பின் தொண்டர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதற்கு திருச்சி மாநாடு சான்றாக அமைந்துள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.