பயங்கரவாதிகள் ஊடுருவலா… அயோத்தியில் 3 பேரை பிடித்து உ.பி.தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை..!!

 அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா எனும் அறக்கட்டளையின் கண்காணிப்பு கட்டுமான பணி என்பது தொடங்கியது. இந்த பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் 3 அடுக்குகளாக நாகரா கட்டக்கலையில் இந்தகோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்ட பணி என்பது முடிவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது அயோத்தி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ட்ரோன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி போலீசார் வாகனங்களில் ரோந்தும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் அயோத்தியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 3 பேர் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களை பிடித்து உத்தர பிரதேச மாநில பயங்கரவாத ஒழிப்பு படையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி உத்தர பிரதேச மாநிலம் சிறப்பு டிஜபி (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறுகையில், ”3 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையின் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில அரசின் உத்தரவுப்படி பரிசோதனைகள், கண்காணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது தான் 3 பேரும் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் பயங்கரவாதி அமைப்புடன் தொடர்பு கொண்டவர்களா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்றார்.