சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.
ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்… அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத காவலில் வைத்ததாக சொல்லி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை சொன்னார்கள். அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்தார்..
ஆனால், அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை, அவர் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம், அதன்பிறகு சிகிச்சை வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை கூறி, மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இப்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றையதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்பின் முடிவு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.
ஆட்கொணர்வு மனுவில், கைது செய்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துவிட்டால், அது அமலாக்கத்துறையினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் என்று தெரிகிறது.. இதுகுறித்து நாம் அரசியல் நோக்கர்கள் சிலரிடம் விசாரித்தபோது, நம்மிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
“இதற்கு முன்பு, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் முதல் ராகுல்காந்தி வரை பலரை அமலாக்கத்துறையினர் விசாரித்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் வராத ஒரு சிக்கல் இப்போது ஏன் வருகிறது? அமலாக்கத்துறையினருக்கு விசாரிக்கக்கூடிய அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்படுவது ஏன்? என்று தெரியவில்லை.
இந்த வழக்கை 3வது நீதிபதியை கொண்டு, உடனடியாக விசாரிக்க போவது அமலாக்கத்துறையினருக்கு பிளஸ் பாயிண்ட்தான் என்றாலும், கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டாலும், வருகிற 24ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் வரவுள்ள ஆட்கொணர்வு மனுமீதான வழக்கின் தீர்ப்புதான் முக்கியமானது.. இன்று வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்தே சுப்ரீம்கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்..
அதேசமயம், அமலாக்கத்துறை கஸ்டடி கேட்டு தனிமனுவை தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
இந்த வழக்கையும் தாண்டி, அமலாக்கத்துறையின் அதிகாரம் என்ன? என்பது பற்றிய விவாதம் வெடித்து வருகிறது.. மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால், 20 நாளில் ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் பணம் மீட்கும் வரை ஜாமீனில் விடமாட்டேன் என்பது போல் அமலாக்கத்துறையின் ஷரத்துகள் சரியா? என்ற கேள்வியும், விவாதமும் தொடங்கி உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இன்றைக்கு அமலாக்கத்துறையின் அதிகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு நீதிபதி நிஷா பானுவின் ஒற்றை தீர்ப்பு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவது உட்பட எத்தனையோ விஷயங்களை ஆளுநர் தரப்பு செய்தபோதிலும்கூட, இந்த விஷயத்தை பொறுத்தவரை பாஜகவுக்கே வலிமை சேர்ந்து வருகிறது.. அதேபோல, செந்தில் பாலாஜியை தவறே செய்யாதவர்போல, திமுக தரப்பில் உயர்த்தி பிடித்து வருவது, திமுகவுக்குதான் மைனஸாக பார்க்கப்படுகிறது” என்கிறார்கள்.