பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தை தொடங்கியவர் நிலக்கோட்டை, சின்னாளபட்டி, நத்தம் பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் அருகே நடை பயணத்தை நிறைவு செய்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “உழைக்கும் வர்க்கம் அதிகமாக உள்ள ஊர் திண்டுக்கல். இது ஒரு காலத்தில் திண்டீஸ்வரம் என அழைக்கப்பட்டது. பிற மாநிலத்தில் கூட திண்டுக்கல் என்றால் பூட்டு என மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பூட்டு என்றால், அது ஒரு வார்த்தை இல்லை. அது நம்பிக்கை. வரும் வழியில் இரண்டு பூட்டுகளை கொடுத்தார்கள். ஒன்று திமுகவிற்கு பூட்டு போடுங்கள். இரண்டு காங்கிரசுக்கு பூட்டு போடுங்கள். திமுக குடும்ப ஆட்சியில் இருக்கும் உதயநிதிக்கும், காங்கிரஸ் குடும்பத்தில் ராகுலுக்கும் பூட்டுபோடவேண்டும். இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் தவறாக பேசும் ராகுல் காந்திக்கும், இந்து தர்மத்தை பற்றி தவறாக பேசும் உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட வேண்டும்.
இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பணத்தை ஒத்தையாக கொடுத்தவிட்டு கத்தையாக கொள்ளையடிப்பது தான் திமுகவின் அரசியல் ஸ்டைல். திமுக ஆட்சிக்குவந்தபிறகு சொத்துவரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு என பல கட்டணங்களை உயர்த்திவிட்டனர்.
உலகத்தில் முதன்மையான நாடாக இந்தியாவை கொண்டுவர வேண்டும் என மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்தியில் ஆட்சி செய்தவர்கள் நிலக்கரி, 2 ஜி என எத்தனையோ ஊழல் வழக்குகளில் சிக்கினர். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி மட்டும் சுத்தமாக இல்லை. அவரை சுற்றியுள்ள 79 மத்திய அமைச்சர்களையும் சுத்தமாக வைத்திருக்கிறார். மோடியை ஊழல்வாதி என்பவர்களுக்கு, அரசியல் அட்ரஸ் இருக்காது. அவர்களை மக்களே வேரறுத்து விடுவார்கள்” என்றார்.