கோவை மாதம்பட்டி அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55 ) கூலி தொழிலாளி.பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் இவரது அண்ணன் ராகுல் இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். அங்கு செல்வராஜ் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் கோகுல், ராகுல் ஆகியோருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது .இதனால் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து கூலி தொழிலாளி செல்வராஜை சரமாரியாக தாக்கினார்கள்.பிறகு செல்வராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் செல்வராஜ் நேற்று பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பேரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்” அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து செல்வராஜ் உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்கள் செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.இதை தொடர்ந்து பேரூர் போலீஸ் துணை சூப்பரண்டு ராஜபாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அவர்கள் சமாதானம் அடைந்தனர் .பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து பேரூர்போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கோகுல் அவரது அண்ணன் ராகுல் ஆகிய 2 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர் .இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- செல்வராஜ் குடிபோதையில் தகராறு செய்து கோகுல் ,ராகுல் ஆகியோரது குடும்பத்தினரை அவதூறாக பேசியுள்ளார். இதனால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் மது குடித்துவிட்டு ஒரு தோட்டத்திற்கு சென்று அதன் பிறகு இறந்துள்ளார்.தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளி கொலை வழக்கில்திமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.