திருச்சியில் தீபாவளி தற்காலிக பேருந்து நிலையம் – காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.!!

திருச்சி மன்னாா்புரம் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந.காமினி திறந்து வைத்தாா்.
தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, சேவா சங்கம் பள்ளி, பென்வெல்ஸ் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை வழியாக சோனா-மீனா திரையரங்கம் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
புதுக்கோட்டை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – டி.வி.எஸ். டோல்கேட், சுற்றுலா மாளிகை சாலை, பழைய அரசு குடியிருப்பு பகுதி, இலுப்பூா் சாலையிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
மதுரை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – மன்னாா்புரம் சா்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை மாா்க்கத்திலிருந்து, திருச்சி மாநகா் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னாா்புரம் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி மன்னாா்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.மற்ற வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னாா்புரம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு மாநகர சுற்றுப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பா் 4-ஆம் தேதி வரை தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும்.
தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களின் வசதிக்காக காவல்துறை பாதுகாப்பு, நிழற்குடை, குடிநீா் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை தற்காலிக பேருந்து நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் ந. காமினி கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறாக எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது. வாகனங்களை அவற்றுக்குரிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைக்கக் கூடாது.
பட்டாசு வியாபாரம் செய்வோா் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகாா்களுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100, மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ்அப்) 96262 73399 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.