தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை விமர்சனம் செய்வதில், எதிர்கட்சியான அ.தி.மு.க.வையே விஞ்சி விட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இதன் காரணமாக அவர் எந்த கட்சிக்கும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு அண்ணாமலை மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- “தி.மு.க.வில் மட்டும் தான் அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல், அநாகரீகமாக பேசி வன்மத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அநாகரீகமாக பேசுவதற்காகவே தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் உள்ளிட்டோர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் நான் தனி மனிதனாக இருந்து இந்த தமிழக அரசை எதிர்க்கிறேன்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சிக்கு வந்து பதினாறு மாதங்கள் ஆகிறது. இந்த பதினாறு மாதங்களில் அதிகளவில் ஊழல் செய்துள்ளார்கள். காங்கிரசுக்கு ஒரு 2ஜியை போல் தி.மு.க.வுக்கு ஒரு பி.ஜி.ஆர். என்று பட்டியல் போட்டு வைத்துள்ளோம். அந்த பட்டியலை தகுந்த காலம் வரும்போது கட்டாயம் வெளியிடுவோம். இந்த பட்டியலால் தி.மு.க.வின் அடித்தளமே ஆட்டம் காண உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இல்லாத தகுதி ஒரு தனிமனிதனாக எனக்குள்ளது.
குடும்ப பின்னணி இல்லாமல், முதல் தலைமுறை அரசியல்வாதியாக நான் இவ்வளவு தூரம் பயணித்துள்ளேன். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்சி சார்ந்த சிலர் ஊடகங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு என்னை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். அறம் இல்லாமல் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.