திமுக தனது செல்வாக்கு சரிந்து கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கிறது – இபிஎஸ் கடும் விமர்சனம்..!

திருநெல்வேலி மாவட்டம், அம்பை-ஆலங்குளம் சாலையில் உள்ள வடக்கு ரதவீதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள் என்றும், அதிமுக ஒன்றாகதான் இருப்பதாக கூறிய அவர், வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது என்று தெரிவித்தார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும் என்று கூறிய அவர், அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்றும், விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டினை ஆண்ட கட்சி அதிமுக என்றும், அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்பதாக விமர்சித்தார்.