கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வளாகம் உள்ளது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் சரக்குகள் கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாட்டுக்கு பாண்டட் டிரக் என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன. மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன், வெளிநாட்டு சரக்கு போக்குவரத்து பிரிவில் 150 டன் என மொத்தம் 850 டன் சரக்குகள் கையாளப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்கேனர் ஆபரேட்டர் தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரி கூறும் போது
உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் ஸ்கேனர் ஆப்ரேட்டர்கள் சரிபார்த்து அனுமதி அளித்த பிறகு தான் விமானத்தில் ஏற்றி செல்லப்படும். இதுவரை விமான நிறுவனங்கள் ஊழியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய விதிமுறை அறிவித்தது. அதன்படி விமான நிலைய ஆணையம் சார்பில் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும் புதிய விதிமுறையால் கோவை உட்பட நாடு முழுவதும் 13 விமான நிலையங்களில் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து கையாளப்படுவது இல்லை. மதுரையில் பிரச்சனை இருந்தது சமீபத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவையில் அதற்கான பிரத்தியேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் இந்த பிரச்சனையால் தலா 350 டன் என மொத்தம் 700 டன் சரக்குகள் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டு உள்ளன. இதனால் ரூபாய் 30 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இது தொடர்பாக விமான நிலைய ஆணையாக தலைமையகத்திடம் தெரிவித்து உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்கள்.