திமுக அரசின் நடவடிக்கைகளால திருப்பூருக்கு எந்த திட்டங்களும் உள்ளே வராத நிலை உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில், மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க மாநாடு பல்லடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவி அண்ணாமலை பேசியதாவது: திருப்பூரில், 37 ஆண்டுகளுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியை துவக்கினர். இன்றைக்கு உள்நாட்டில் மட்டும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு நகரம் மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 36 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். திருப்பூர் மாநகராட்சியில், எம்.எல்.ஏ., துணை மேயர், அமைச்சர் என, ஒவ்வொருவரும் மேயர் போன்று நினைத்து நடக்கின்றனர்.
வீட்டுக்கு நான்கு சுவர்கள் போன்று, திருப்பூருக்கு நான்கு மேயர்களை எழுப்பி வைத்து கொள்வதால், எந்த திட்டங்களும் உள்ளே வராத நிலை உள்ளது. பல்வேறு சோதனைகளை கடந்து திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் பா.ஜ.கவினர் உள்ளனர். கறிக்கோழி பிரச்னையில் கோழி வளர்ப்போர் – முகவர்கள் இடையே தமிழக அரசு, 15 நாட்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க களத்தில் இறங்கி கோட்டையை நோக்கி செல்லவும் தயங்காது. வரும் தேர்தலுக்கான தீர்ப்பை, பல்லடத்தில் எழுதி விட்டீர்கள். இந்த கூட்டத்தை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று, வருண பகவான் வந்து சென்று விட்டார். இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.