பஹல்காம் படுகொலை எதிரொலி… காஷ்மீர் – கன்னியாகுமரி களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்.!!

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், பயங்கரவாத சம்பவம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.

பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கிறது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்துள்ளது.

பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், அப்பகுதி மக்களிடம் பயங்கரவாத சம்பவம் மற்றும் பயங்கரவாதிகளின் அடையாளங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர். மேலும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களாக சந்தேகப்படும் நபர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தோரை நேரில் சந்தித்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் உருவபடங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரை ஒருவரே இந்த கோரத் தாக்குதலை நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக என்.ஐ. ஏ வட்டாரங்கள் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது; பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேருக்கு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் உதவியிருப்பதும் தெரியவந்துள்ளது என்கின்றன.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், ஸ்லீப்பர் செல்களின் வீடுகளை தேடி கண்டுபிடித்து அவற்றை வெடிவைத்து தகர்த்து அழிக்கும் நடவடிக்கைகளையும் அம்மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டும் வருகின்றனர்.