எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டிதாக வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் உண்மை இருப்பின் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1962-ன் கீழ் 125 ஏ 125 ஏ(1 ) 125 ஏ(11) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்ட நீதிமன்ற உத்தரவையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது சேலத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.