கலாச்சார சின்னங்களை புனரமைப்பது அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்…

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் ஆலயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது: ஒரு காலத்தில் நாம் அடிமைமன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்துமாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. அடிமைத்துவ காலத்தில் இந்தியாவை பலவீனப்படுத்த முயன்ற கொடுங்கோலர்கள் முதலில் நமது கலாச்சார சின்னங்களைத்தான் குறிவைத்து அழித்தனர். எனவே, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பழைய கலாச்சார சின்னங்களை மீட்டெடுப்பதுடன், அவற்றை மறுகட்டமைப்பு செய்து புதுப் பொலிவேற்ற வேண்டியது தற்போது நமதுதலையாய கடமையாக மாறியுள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் அழியாத பெருமைக்குஎடுத்துக்காட்டு . அதேபோன்று மகாகாள் மஹாலோக் நமது அழியாத தன்மைக்கு சான்று. கேதார்நாத் ஆலயம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. நம்முடைய கலாச்சார அடையாளங்களுக்கு நாம் மதிப்பளித்துஇருந்தால், நாட்டுக்குள் ஒற்றுமை மற்றும் சுயமரியாதை உணர்வு என்பது வலுவாக இருந்திருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகும் கூடசோம்நாத் ஆலய புனரமைப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது நினைவுகூரத்தக்கது. அந்த தீய சக்திகள் நாட்டில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது அந்த அவலநிலை மாறியுள்ளது.

காசி என்று அழைக்கப்படும்வாராணசி (பிரதமரின் நாடாளுமன்ற தொகுதி) இந்தியாவின் கலையை வடிவமைத்து நினைத்துப்பார்க்க முடியாத உயரத்துக்கு கொண்டு சென்ற நகரமாகும். இங்கிருந்து அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டன. இங்கிருந்துதான் மனித விழுமியங்கள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வு அகில உலகத்துக்கும் சென்றுசேர்ந்தது என்பது பெருமிதத்துக்குரியது. 9 தீர்மானங்கள்; மக்கள் 9 தீர்மானங்களை பின்பற்ற வேண்டும். முதலாவது ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். நீர்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் நகரத்தை சுத்தமாக பராமரிக்க உறுதியேற்க வேண்டும். நான்காவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். ஐந்தாவது, முடிந்த வரை சொந்த நாட்டை சுற்றிப் பாருங்கள், இதைசெய்யும் வரை நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது. பெரியபணக்காரர்கள் வெளிநாடுகளில்திருமணம் செய்வதை தவிர்த்து, இந்தியாவில் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும்.

ஆறாவது, இயற்கை விவசாயம் குறித்து நமது விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூமித்தாயை காப்பாற்றுவதற்கான முக்கியமான பிரச்சாரம் அது. ஏழாவது, உணவில் சிறுதானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அது, உடல் மற்றும் மனவலிமை பெற பேருதவி புரியும். எட்டாவது உடற் தகுதியைப் பெறயோகா அல்லது ஏதேனும் விளையாட்டை உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுங்கள். எனது இறுதியான மற்றும் ஒன்பதாவது கோரிக்கை என்பது குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்துக்காவது உதவுங்கள். இந்தியாவில் இருந்து வறுமையை அகற்ற இதனை மக்கள் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.