மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலி அசுர வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய மெட்டாவின் திரெட்ஸ் செயலி அறிமுகமான ஒரே நாளில் 5 கோடி பயனர்களை பெற்றது. முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் திரெட்ஸ்-இல் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
ட்விட்டரின் அனைத்து செயல்பாடுகளையும் திரெட்ஸ் காப்பியடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மெட்டா நிறுவனத்துக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை, மெட்டா நிறுவனம் பணியமர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக மெட்டா பயன்படுத்தியதாகவும் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
இதை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், போட்டி நல்லது ஆனால் ஏமாற்ற கூடாது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு திரெட்ஸ் பதிவு மூலம் பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர் Andy Stone, திரெட்ஸ்-இல் உள்ள பொறியாளர் குழுவில், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் யாரும் இல்லை என மறுத்துள்ளார்.