என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ..!

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார்.
சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி.

36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னை வியாசர்பாடி குடியிருப்பு அருகே இன்று அதிகாலை சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார்.

அவர் உடல் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. எதற்காக என்கவுன்டர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் காவல்துறை தரப்பு இன்னும் வெளியிடவில்லை. எனினும், காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்கச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரபல தாதாவாக வலம்வந்தவர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.