பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அத்துமீறல் தொடர்கிறது. கனிமவளமும் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் கனிமவளம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு கல்குவாரிகள் செயல்படுகின்றன.
இங்கிருந்து அதிக அளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கேரளாவுக்கு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
குவாரிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாறை உடைக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெடி மருந்து பயன்படுத்துவதால் நில அதிர்வு ஏற்பட்டு, சுற்றுப் பகுதி விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன், சுற்றுச் சூழல் அபாயம் அதிகரித்து வருகிறது.
மேலும், கல்குவாரிகளில் இருந்து, ‘பர்மிட்’ அளவை விட அதிகமாகவும், ஒரே ‘பர்மிட்’ பயன்படுத்தி பல முறையும், ‘பர்மிட்’ இன்றியும் கனிமவளம் விற்கப்படுகிறது.
இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பூலோக அமைப்பிலும் இயற்கைக்கு முரணான செயல்களால் ஆபத்து ஏற்படுகிறது.
டிப்பர் லாரிகளில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதால், கிராமப்புற ரோடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக அளவு டிப்பர் லாரிகள் செல்வதால், மக்கள் நிம்மதி இழந்து உள்ளனர்.
கனிம வள கொள்ளையை தடுக்க, சப் – கலெக்டர், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என பல அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதற்கு அபராதம் விதிக்கின்றனர். ஜூலை மாதத்தில் எட்டு லாரிகள் பிடிபட்டது. இதற்கு 3.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
பல நுாறு லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லும் நிலையில், அதிகாரிகள் ஒரு சில லாரிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கின்றனர்.
இதில், ஆளுங்கட்சி தலையீடு அதிகம் உள்ளதால், அரசு அதிகாரிகளும் மவுனமாகி கனிமவள கொள்ளையை தடுக்க முன் வருவதில்லை. இதனால், கனிமவளம் கொள்ளை போவது தொடர்ந்து நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் இருக்கும் கனிமவளம் முழுவதும் கொள்ளை போய்விடும். இதனால், தமிழகத்தில் கனிமவள தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என, கட்டுமான பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அத்துமீறலை தடுக்க முடியாத அளவுக்கு, ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகமுள்ளது. ஆளுங்கட்சியின் பல தரப்பு அதிகார மையங்களுக்கு, கனிமவள விவகாரத்தில் தொடர்பு இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும் என்கின்றனர் விபரம் அறிந்த அதிகாரிகள்.
இயற்கையையும், கனிம வளத்தையும் பாதுகாக்க முதல்வரே நேரடியாக களமிறங்கி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.