அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களோடு சேர்ந்து இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகரகள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பிறந்தநாள் கேக்கினை தொண்டர்களோடு இணைந்து வெட்டி மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, செம்மலை உள்ளிட்ட ஏராளமானோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம்பி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.