ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி..

ஈரோடு  ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சி. கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.வை.கோ. பார்த்தார்.
கோவை: ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி (வயது77). ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு பகுதியை சேர்ந்தவர். ம.தி.மு.க. மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். கணேச மூர்த்தி எம்.பி. நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் கணேசமூர்த்தி எம்.பி. தென்னை மர பூச்சிக் கொல்லிக்கு பயன்படுத்தும் ‘சல்பாஸ்’ எனப்படும் விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வழக்கம் போல் தந்தையை பார்ப்பதற்காக அவருடைய மகன் கபிலன் காலை 9.30 மணிஅளவில் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் மயக்க நிலையில் தனது தந்தை கணேசமூர்த்தி கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கணேசமூர்த்தியை அவர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஈரோட்டுக்கு வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் மூலமாக மதியம் 2.30 மணிக்கு கணேசமூர்த்தி கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கே.எம்.சி.எச். தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கணேச மூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் துரை வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருவரும் கோவை தனியார் மருத்துவமயில்சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை பார்த்தனர்
மேலும் அமைச்சர் முத்துசாமி மற்றும் ம.தி.மு.க. கட்சிபிரமுகர்கள் உள்பட பலரும் மருத்துவமனைக்கு சென்று கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்
கணேசமூர்த்தியின் மனைவி பாலாமணி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு கபிலன் என்ற மகனும், தமிழ்பிரியா என்ற மகளும் உள்ளனர். இதுவரை 3 முறை எம்.பி.யாகவும், ஒருமுறை மொடக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவரும் கேட்கவில்லை.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மேலும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கணேசமூர்த்தி மிகவும் நெருக்கமானவர்.
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி குடும்ப விவகாரம் காரணமா ?அரசியல் விவகாரம் காரணமா ?என்பது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.