திருப்பூர்: வதந்தி கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க தொழில் துறையினருக்கும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் தொழில் துறையினருடன் உடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உட்பட பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது: ”தமிழகத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பீதி, பயம், பதற்றம் தற்போது தணிந்துள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் ராணுவம் போன்று அணியாக நின்று, இரவு பகலாக நின்று வதந்தியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தெரியாமல் செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். தவறான வதந்தி பதிவிட்டவர்கள் தங்களது பதிவை நீக்கி உள்ளனர்.