அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும் தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் கடந்த 4ந்தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. நேற்றும் இன்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பல்வேறு பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்று மதியம் விசாரணை தொடங்கியவுடன், கடந்த ஆண்டு ஜூலை11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் கட்சி சட்ட விதிகளுக்கு விரோதமானது எனக் கூறி பல்வேறு வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டன. ‘எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை, வழக்கமான பொதுக்குழு கூட்டங்களுக்கும், சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது, இவை அதிமுக.வின் கட்சி விதிமுறைகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளதை விளக்கிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விவரங்களையும் எடுத்துரைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இருந்த பல முக்கியமான அம்சங்களை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு கணக்கில் கொள்ளாமலேயே விட்டுவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
‘திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால்தான் அதிமுக என்ற தனிக்கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார், அந்த பொதுக்குழு கூட்டம் அவருக்கு கசப்பான அனுபவமாகவே இருந்தது, எனவேதான் எம்.ஜி.ஆர், எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்பதை விரும்பினார். அதன் அடிப்படையிலேயே கட்சி விதிகளையும் அவர் அமைத்தார்’ என ஜூலை 11ந்தேதி கூடிய பொதுக்குழுவுக்கு எதிராக பல்வேறு வாதங்களை உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முன்வைத்தது.
சில முக்கிய விதிமுறைகள் எப்பொழுதும் மாற்றி அமைக்க கூடாது என எம்ஜிஆர் விரும்பினார் என்றும் ஆனால் அத்தகைய விதிமுறைகளை எல்லாம் அவசரகதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளனர் என்றும் ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.
ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், திடீரென ஒருவர் மைக்கின் முன்பாக வந்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என சொல்லிவிட்டு அதனை பொதுக்குழு ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள் எனக் கூறிய ஓபிஎஸ் வழக்கறிஞர், இவை அனைத்தும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டுள்ளது என்றும் இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் வாதிட்டார்.
‘இன்று தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் கூட நான் தான் வெற்றி பெற்று அதிமுகவின் ஒற்றை தலைமையாக வருவேன்’ என்றும் உச்சநீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்றும் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலியாக பார்க்கிறது என்ற தங்களின் ஆதங்கத்தை ஓபிஎஸ் தரப்பு எடுத்துரைத்தது.
அதிமுகவின் பொருளாளராக இருக்கும் ஓபிஎஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்.கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தவர். கட்சியின் தலைமை இவருக்கு மூன்று முறை முதலமைச்சர் பதவியை கொடுத்த போதும் விசுவாசத்துடன் நடந்து கொண்டு தலைமையின் நன்மதிப்பை பெற்றவர் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள் என்று இபிஎஸ் மீது ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதையடுத்து இன்றைய விவாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கை வரும் செவ்வாய்க் கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.