கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் AK TRADERS யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தைக் கடந்த இரண்டு வருடங்களாக ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் நடத்தி வருகிறார்.
அந்த விளம்பரங்களை உண்மை என நம்பிய முன்னாள் ராணுவ வீரர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தகுமார், கிட்டனூரை சேர்ந்த சங்கர், பிரகாஷ், செட்டிப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை சேர்ந்த வேலன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாகச் சேர்ந்துள்ளனர். அதிக அளவில் இந்த திட்டத்தில் ஆட்களைச் சேர்த்தால் அதற்கேற்ப கமிஷன் கிடைக்கும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
டார்கெட்டை முடித்த முகவர்களை அந்நிறுவனத்தினர், கோவா, தாய்லாந்து எனச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று குளிர்வித்திருக்கிறார்கள். இன்னோவா கார், வீடு உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏமாந்த அந்த முகவர்கள் தங்களுடன் தொடர்பில் இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசி அதிக அளவில் முதலீடு பெற்றனர்.
ஆரம்பத்தில் டெபாசிட் செய்த அனைவருக்கும் சிறிய அளவில் லாபத்தொகை தந்த நிலையில் திடீரென சமீப காலமாக எந்த தொகையும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஓசூரில் உள்ள அந்த அலுவலகத்திற்க்கு சென்று பார்த்துள்ளனர். அந்த அலுவலகம் பூட்டு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுவனம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த டெபாசிட் செய்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுக்க ஆரம்பித்தனர்.
ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாகச் சமீபத்தில் அந்த நிறுவனம் மீது புகார் எழுந்தது. ஆனால் இதில் சிறு, குறு தொழில் செய்பவர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் ஏமாந்துள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ‘யுனிவர் காயின்’ நிறுவனத்திற்கு சொந்தமாக ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள முகவர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரகாசும், சீனிவாசனும் கைது செய்யப்பட்டனர். இது சம்மந்தமாக தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் விசாரனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளி அருண்குமார் இன்று பொதுமக்களிடம் சிக்கினார்.
பிடிபட்ட அருண்குமாரிடம் கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 12 சவரன் தங்க நகை மற்றும் அருண்குமார் பயன்படுத்தி வந்த சொகுசு கார் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் புதிய நிலம் வாங்க வந்தபோது அடையாளம் காணப்பட்ட அருண்குமாரை பொதுமக்கள் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பாகலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து தற்போது கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.