போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!!

போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!!

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். .அந்த நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பங்குதாரராகவும் அக்கவுண்ட்ஸ் நிர்வாகியாகவும் சீனிவாசன் என்பவரை வினோத் நியமித்து உள்ளார். நிறுவனத்தின் வங்கி கணக்கு வழக்குகள், செலவினங்கள் அனைத்தையும் சீனிவாசன் கவனித்து வந்தார். இந்நிலையில் கம்பெனி வரவு – செலவுகளை வினோத் சரி பார்த்தார். அப்போது நிறுவன செலவிற்காக வங்கி கணக்கில் இருந்து 41 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு இருந்ததும் சீனிவாசன் அவரது மனைவி பிருந்தா மைத்துனர் பாலாஜி,உறவினர் சாம்பவி பாலாஜி ஆகியோர் வங்கி கணக்குகளில் 15 லட்சத்தை 41 ஆயிரத்து 173 ரூபாய் மாற்றப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதே நேரத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்து போனதை வினோத் உறுதி செய்தார் .தொடர்ந்து சீனிவாசனை அழைத்து கணக்கு வழக்குகளை கேட்டு உள்ளார். சில நாட்கள் கழித்து சீனிவாசன் போலி பில்களை கொண்டு வந்து வினோத்திடம் கொடுத்து உள்ளார். அதனை வினோத் நம்ப மறுத்ததால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சீனிவாசன் மற்றும் அவரது மைத்துனர் பாலாஜி உள்ளிட்டோர் வினோத்திடம் தகராறு செய்து தாக்க முயன்றனர். மேலும் வினோத்தின் வங்கி காசோலையை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற நபரிடம் கொடுத்து கடன் பெற்றதாக கூறி நோட்டீஸ் அனுப்பினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலி கணக்குகள் மூலம் 15 லட்சத்து 71 ஆயிரத்து 143 ரூபாய் மோசடி செய்ததாக சீனிவாசன், அவரது மனைவி பிருந்தா, மைத்துனர் பாலாஜி, சாம்பவி பாலாஜி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.