தஞ்சாவூரில் போலி மதுபான ஆலை – 3 பேர் கைது..!

தஞ்சாவூர்: தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை அடியோடு ஒழித்து கட்ட தமிழ்நாடு அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் 500 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் டி என் 01 ஏ இ 2314 செவர்லெட் அஸ்ட்ரா கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியில் சையது இப்ராஹிம் என்பவன் குடியிருக்கும் மேல காவேரி மாதா கோவில் பின்புறம் கே எம் எஸ் நகரில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக குறித்த கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ஜே. ராமன் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடம் சென்று பார்த்த போது சையது இப்ராஹிம் என்பவன் டிஎன் 01 ஏ இ 2314 செவர்லெட் அஸ்ட்ரா காரில் போலி மதுபானங்களை விற்பனைக்காக ஏற்றிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். சையது இப்ராஹீம் விசாரித்த போது பாண்டிச்சேரியில் சாராயம் வாங்கி வந்து அதில் கலர் சாயம் கலந்து தமிழ்நாடு காலி மதுபான பாட்டில்களில் அடைத்து தமிழ்நாடு மதுபான ஸ்டிக்கர் மற்றும் முத்திரை ஹாலோ கிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனைக்கு கோலிஞ் ஜ ராஜன் என்பவனிடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான்.கோலிஞ்ச ராஜன் என்பவன் கும்பகோணம் குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை கூடம் உள்ள பகுதியில் பார் நடத்தி வருகிறான். இவன் கைது செய்யப்பட்டான். மேலும் சையது இப்ராஹிம் என்பவனுக்கு போலி மதுபானம் தயாரிக்க உதவி செய்த அன்புச்செல்வன் என்பவனும் கைது செய்யப்பட்டான். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
என் எம் மயில்வாகனன் காவல்துறை தலைவர் அமலாக்கம் சென்னை. மற்றும் வி. சியாமளா தேவி காவல் கண்காணிப்பாளர் மத்திய நுண்ணறிவு பிரிவு.சென்னை அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இச் சோதனையில் போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையில் 500 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய செவர்லெட் அஸ்ட்ரா கார் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மதுபான கூடம் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் முனைவர் அமல்ராஜ் கூடுதல் காவல் துறை இயக்குனர் அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை வெகுவாக பாராட்டினார். இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணம் இல்லாத சேவை எண் 10581 அல்லது 9498410581 என்னை தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகவைக்கப்படும்.