ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குப்பதிவு செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
* ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் மக்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேர் மதசார்பற்ற கூட்டணி சின்னமான கை சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாதம் நல்ல ஆட்சியின் அடையாளமாக இது கண்டிப்பாக அமையும்.
வெற்றி பெற முடியாது என்பதால் மை அழிவதாக எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.எதிர்க்கட்சியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்.தேர்தல் ஆணையம் கட்சி பாகுபாடு இன்றி செயல்பட்டு வருகிறது.ராகுலின் நடைப்பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், வெள்ளோட்டமாகவும் இந்த தேர்தல் முடிவு இருக்கும். இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போதே எனது வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டனர்’ என்றார்.