கோவை ஒண்டிப்புதூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரவணக்குமாருக்கும் அவரது மாமனார் கிருஷ்ணசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணசாமி மீண்டும் சரவணக்குமார் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். மேலும், சரவணக்குமாரையும் அவரது மனைவியை தாக்கினார். அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி தான் மறைத்துவ் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணக்குமாரை குத்தினார். இதில் அவருக்கு கை, நெஞ்சு உட்பட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் அவர் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் சரவணக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சரவணக்குமார் சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர். அவரை கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மருமகனை மாமனாரே கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.