சொத்துக்காக தந்தையை கழுத்தை இறுக்கி படுகொலை – மகன் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம், அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சென்னிமலை கவுண்டர் (வயது 94) இவருக்கு வேலுச்சாமி, நடராஜ், ஆறுச்சாமி ஆகிய 3 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.. ஆறுச்சாமி தறி பட்டறை நடத்தி வந்தார். சென்னிமலை கவுண்டருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆறுச்சாமி வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அவரிடம் சண்டை போட்டுவிட்டு மற்ற மகன்களான வேலுச்சாமி மற்றும் நடராஜர் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது பெயரில் இருந்த சொத்தை வேலுசாமி நடராஜ் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தார். பின்னர் அவர்களிடமும் சண்டை போட்டுவிட்டு மீண்டும் ஆறுச்சாமி வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் அந்த சொத்தை நீதிமன்றம் மூலம் தனது பெயருக்கு மாற்றி ஆறுச்சாமிக்கு எழுதி கொடுத்தார். சென்னிமலை கவுண்டர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அவர் சொத்துக்களை மாறி மாறி எழுதி கொடுத்ததால் மகன்களுக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்தது. கடந்த 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னிமலை கவுண்டர் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டதாக ஆறுச்சாமி தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதை உண்மை என்று உறவினர்கள் நம்பினர் .ஆனால் சென்னிமலை கவுண்டர் கழுத்தில் லேசான காயம் தென்பட்டது .எனவே தனது தந்தையின்சாவில் மர்மம் இருப்பதாக வேலுசாமி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் சென்னிமலை கவுண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முதுமை காரணமாக தனது தந்தை இறந்துவிட்டதாக ஆறுச்சாமி நாடகமாடியது தெரிய வந்தது. ஆனால் போலீசாரின் விசாரணையில் தனக்கு எழுதி வைத்த நிலத்தை தனது அண்ணன்களுக்கு மீண்டும் தனது தந்தை எழுதிக் கொடுத்து விடுவாரோ? என்று நினைத்து அவர் எழுந்து நடப்பதற்காக கட்டியிருந்த வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் ஆறுச்சாமியை நேற்று மாலை கைது செய்தனர் .சொத்து பிரச்சனையால் தந்தையை மகனே கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.