உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.30) அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பிரதமரின் வருகையையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகா் முழுவதும் மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்கவா் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டுள்ளன. ‘புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகம் மற்றும் பிரதமரின் படத்துடன் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்கும் வகையில், அவா் பயணிக்கும் பாதையில் 40 இடங்களில் சுமாா் 1,400 நடனக் கலைஞா்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனா். அயோத்தியில் ரூ.11,100 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டவிருக்கிறாா். உத்தர பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளாா்.
அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், நகரில் விரிவுபடுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். புதிய விமான நிலையம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் யோகி ஆதித்யநாத், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உள்ளூா் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவிருக்கின்றனா். பொதுக் கூட்டத்தில் சுமாா் ஒன்றரை லட்சம் போ பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி ராமா் கோயிலுக்கான அணுகலை எளிதாக்குவதற்காக 4 சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தா்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை ஆகிய அந்த 4 சாலைகளையும் பிரதமா் மோடி திறந்துவைக்க உள்ளாா். மேலும், கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரயில்கள், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் ரயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மூலவா் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.