கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விக் சண்முகம் ( வயது 29) பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்கு, கஞ்சா, போக்சோ வழக்கு உட்பட 15 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி லியோ மார்ட்டின் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் ராமநாதபுரம் போலீசார் விக் சண்முகத்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு சண்முகம் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிற பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்து அவரை போலீசார் தேடி வந்தனர் .இந்த நிலையில் விக் சண்முகம் கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். ஏற்கனவே அவருக்கு 2 -வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு , போக்சோ கோர்ட்டுஆகியவற்றில் நடந்து வரும் வழக்குகளில் ஆஜராகாமல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த வீக் சண்முகத்தை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி (பொறுப்பு) பத்மா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் விக் சண்முகத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மத்திய சிறையில் அடைத்தனர். கோர்ட்டில் சரணடைந்த பிரபல ரவுடி வீக் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என் மீது 15 வழக்குகள் உள்ளன .இதனால் என்னை சுட்டு கொன்று விடுவதாகவும், என் குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்கு போட்டு விடுவதாகவும் போலீசார் மிரட்டி வருகிறார்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்து 2 மாதம் ஆகிறது. திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னை போலீசார் விடுவதில்லை. என் தம்பி மீது 5க்கு மேற்பட்ட வழக்கு உள்ளன .அவரை பிடித்து போலீசார் கை, கால்களை உடைத்து விட்டனர். என் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் என்னை “என்கவுண்டர்” செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே உயிர் பயத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.