இந்திய ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி வரும் நிலையில், அது தொடா்பான மோசடிகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக மோசடிப் பேர்வழிகள் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வங்கி அட்டை விவரம் கேட்பது, ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) கேட்பது, சுங்கத் துறையில் இருந்து பேசுவதாக கூறுவது, விலை உயா்ந்த பரிசுப் பொருள் வந்திருப்பதாகக் கூறி பண மோசடி செய்வது என பல்வேறு வழிகளில் மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ஆா்பிஐ பெயரைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் புதிய முறைகளைக் கையாண்டு வருவதாக ஆர்பிஐ பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது : ஆர்பிஐ பெயரில் மோசடியாக இ-மெயில் அனுப்புவது, வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருப்பதாகக் கூறுவது, லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகக் கூறுவது, அரசுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுவது என புதிய மோசடிகள் நிகழ்கின்றன. இவற்றில் ஆர்பிஐ-யின் பெயரையும் மோசடியாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆர்பிஐ சார்பில் யாரும் பொதுமக்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள். எனவே இதுபோன்ற மோசடி அழைப்புகள், மின்னஞ்சல்கள் விஷயத்தில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.