தீ விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குவைத் ரூ.12.50 லட்சம் வழங்க குவைத் அரசு உத்தரவு.!!

துபாய்: குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசு மேற்கொண்டுள்ளதாக தி அராப் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டின் மன்காஃப் நகரில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலியான தகவலைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் கேவி சிங் உடனடியாக அந்நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து 46 இந்தியர்களின் உடல்களும் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்திலேயே மத்திய இணை அமைச்சர் கேவி சிங்கும் கொச்சி வந்தார்.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தோரின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டு 7 வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தார்.

குவைத் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, கேரளா அரசுகள் நிதி உதவிகளை அறிவித்திருந்தன. இந்த நிலையில் குவைத் அரசும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி (15,000 அமெரிக்க டாலர்) வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரப் டைம்ஸ் நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தெரிவித்துள்ளார்.

தற்போது குவைத் அரசு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இந்த நிதி உதவி அந்த குடும்பங்களைச் சென்றடையும் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.