வழக்கம் போல, கடந்த வெள்ளிக்கிழமையும் விமானநிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானநிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் துணை மின்நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்த 70 தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். அதே சமயம், பாதுகாப்பு கருதி விமானநிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தரையிறங்க இருந்த விமானங்கள் அனைத்தும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டன. புறப்படத் தயாராக இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஒரு வழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், புகை மூட்டம் நிலவி வந்தது. மேலும், விமானநிலையத்திற்கான மின்சாரம் தடைப்பட்டது. இதனால், நாள் முழுவதும் சர்வதேச விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவிற்கு இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். யாரும் விமானநிலையத்திற்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. விமானநிலையத்திற்கான பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், எப்போதும் பரப்பாக காணப்படும் ஹீத்ரோ சர்வதேச விமானநிலையப் பகுதி, வெறிச்சோடி காணப்பட்டது.
ஹீத்ரோ சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டதால், இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து லண்டன் செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். உலகின் முக்கிய விமானநிலையம் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டதால், ஐரோப்பிய கண்டத்தின் பிரதான வான்வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் ஆயிரத்து 350 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், சுமார் 113 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என கருதப்படுகிறது.