பெங்களூரு: இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலானவர்கள் சர்வ காலமும் ஸ்மார்ட்போன், கணினி என ஏதேனும் ஒரு டிஜிட்டல் சாதனத்தில் நேரத்தை செலவிடுகிறோம்.
அதே நேரத்தில் தினசரி வழக்கமாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒருகட்டத்தில் விரக்தியை கொடுக்கும். அந்த வகையிலான விரக்தியை விரட்டி அடிக்க பெங்களூரு நகரில் ரேஜ் (Rage) ரூம் கான்செப்ட் அறிமுகமாகியுள்ளது.
இந்த அறையில் விரக்தியில் உள்ளவர்கள் காலி பியர் பாட்டீல், ட்யூப்லைட், டிவி பெட்டி, ஏசி, பிரிட்ஜ் என அங்கு வைக்கப்பட்டுள்ள எதை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம். அதன் மூலமாக கோபம் அல்லது விரக்தியை விரட்டி அடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த அறையில் அதைச் செய்பவர்களின் பாதுகாப்பு மட்டுமே பிரதானமாம்.
இந்த ரேஜ் ரூம் கான்செப்ட் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் பிரபலம் என பெங்களூரு நகரில் இதை நடத்தி வரும் நிறுவனத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள பசவனகுடி பகுதியில் இது அமைந்துள்ளது.
இதை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.99 முதல் கட்டணங்கள் தொடங்குகின்றன. பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி இதை பயன்படுத்தலாம் என்றும், rageroombangalore.com என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.