கோவை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டியாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள் . அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் அவர் தாழ்மைக்கு அடையாளமாக தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவினார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது . கோவையில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று மாலை பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தாழ்மைக்கு அடையாளமாக கோவை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் 12 சிறுவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இதேபோல மற்ற கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது . இதில் ஏராளமானவர்கள் பங்கு கொண்டனர்.