இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று முதல் நாளை வரை சென்னையில் நடைபெறுகிறது.
பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில் நடைபெறும் 3-வது கூட்டத்தைத் தொடக்கி வைத்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா பேசும்போது, ”குஜராத் மாநிலம் காந்தி நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் சந்தித்தோம். அதன் பின்னர் உலகம் வரலாறு காணாத சில பேரழிவுகளைக் கண்டது. கிட்டத்தட்ட முழு வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நகரங்கள் வெப்ப அலைகளின் பிடியில் உள்ளன.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மூடுபனி வட அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள நகரங்களைப் பாதித்தது. இங்கே இந்தியாவில், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் பெரிய புயலால் பாதிக்கப்பட்டதைக் கண்டோம். டெல்லியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகளின் தாக்கங்கள் தொலைதூரத்தில் இல்லை. அவைகள் ஏற்கனவே இங்கே இருக்கின்றன. பேரழிவுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை உலகம் முழுவதையும் பாதிக்கின்றன. உலகம் எதிர்கொள்ளும் சவால் இந்தப் பணிக்குழுவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
இந்தப் பணிக்குழுவில் 4 மாதத்தில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பணிக்குழுவின் லட்சியம் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் அளவோடு பொருந்த வேண்டும். படிப்படியாக மாற்றத்தை உருவாக்கலாம் என்பதற்கான நேரம் கடந்துவிட்டது. புதிய பேரிடர் அபாயங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள பேரிடர் அபாயங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். பேரிடர் அபாயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அனைத்து நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுக்கப்படுவதோடு, பேரிடரிலிருந்து மீண்டு வர தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தனியார்த் துறை முதலீடுகளைப் பேரிடர் அபாயக் குறைப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு எப்படி ஈர்ப்பது என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. புயலுக்குத் தயாராக இருப்பதைப் போலவே அதற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். இதுவரை நாட்டின் பல்வேறு நகரங்களில் 177 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும்” என்றார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேசும் போது, “சூழலைப் பாதுகாக்க, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 23.8 சதவிகிதம் பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற வகையில் `பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்பட்டது.
காடுகளைப் பாதுகாத்தல், வனப்பரப்பை அதிகரித்தல், விவசாய நிலங்கள், காலியாக உள்ள பொது இடங்களில் மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற பணிகள், இந்தத் திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு சதுப்புநில இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில், காலநிலை ஸ்டுடியோ தொடங்கியுள்ளோம். சென்னை அண்ணாப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்த ஸ்டுடியோவில் பேரிடர் குறித்து முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில், 10 கிராமங்களைத் தேர்வு செய்து காலநிலை, ‘ஸ்மார்ட்’ கிராமங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்..