ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இரவு பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டுனரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனத்துறை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் வனத்துறை ஊழியர் வாகன ஓட்டுனரை சோதனை சாவடி கட்டடத்துக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வாகன ஓட்டுனர்கள் சோதனை சாவடி முன்பு முற்றுகையிட்டு வனத்துறை ஊழியர்களிடம் ஓட்டுனரை எப்படி வனத்துறை ஊழியர் தாக்கலாம் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என வாகன ஓட்டுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்..
லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனரை தாக்கிய வனத்துறை ஊழியர்- பண்ணாரி வனத்துறை சோதனை சாவடியில் பரபரப்பு.!!
