முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மலர்வளையம் வைத்து மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்தவர் மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாமக தலைவரும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவருமான அன்புமணி ராமதாஸும் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு மன்மோகன் சிங்கின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 8.30 மணி முதல் 9.30 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் படித்துறையில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும், அப்போது முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில், மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மேலும், டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, காங்கிரஸுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டியவர் மன்மோகன்சிங் என்று புகழாரம் சூட்டினார்.