டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தளம் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த சரத் யாதவ் தனது 75வது வயதில் இன்று மரணமடைந்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார்.
பீகாரில் சக்தி வாய்ந்த தலைவர்களாக நிதிஷ் குமார், லாலு பிரசாத் ஆகியோருடன் சேர்த்து அறியப்பட்டவர் தான் சரத் யாதவ். கடந்த 1997ல் பீகார் அரசியலில் லால் பிரசாத் யாதவ் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியை துவக்கினார்.
அப்போது நிதிஷ் குமார், சரத் யாதவ் ஆகியோர் இணைந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியை துவக்கினர். மாநிலத்தில் இந்த 2 கட்சிகளுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.
நிதிஷ் குமார் மாநில மற்றும் மத்திய அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சரத் யாதவ் மத்திய அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சரத் யாதவ் மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளை நிர்வகித்தார். அதன்பிறகு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொறுப்பை வகித்தார். 2004ல் ராஜ்யசபா எம்பியாகவும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் மாதேபுராவிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2017 பீகார் தேர்தலில் நிதிஷ் குமார், பாஜகவுடன் கைகோர்த்தார். இதனை விரும்பாத சரத் யாதவ் சொந்தமாக கட்சியை துவக்கினார். லோக் தந்தரிக் ஜனதாதளத்ம் எனும் பெயரில் கட்சி துவக்கி செயல்பட தொடங்கினார். இது அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் தனது கட்சியை கடந்த ஆண்டு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தார்.
அதன்பிறகு அவர் லாலுவின் கட்சியில் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் சரத் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரத் யாதவ் இன்று இரவு 10.19 மணிக்கு மரணமடைந்தார். இருப்பினும் அவர் எந்த வகையான உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டார் என்பது பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.
சரத் யாதவின் இறப்பை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மிஸ்யூ அப்பா” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். முன்னதாக கடந்த 2018 ம் ஆண்டில் இருந்து சரத் யாதவ் பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார். கடந்த ஆண்டு கூட பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக தான் கட்சியை லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் இணைத்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.