ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட எம்.எஸ்.குரு, அமுதன் பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் மேலும் அபராதமாக 81,90,000 ரூபாயை அனைவரும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதனை அடுத்து நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..