சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சியாம்(எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனை நம்ப வைத்தனர். மேற்படி இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த ஒய்.ஜி.சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அதனை சோதனை செய்ய சீனிவாசனிடமிருந்து ரூ 10 இலட்சங்களை மேற்படி 3 பெற்றுள்ளனர். பின்னர் சியாம்(எ) ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர்கள் சோதனை செய்யப்பட்ட மேற்படி இருடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பலகோடி மதிப்பில் விற்றுக்கொடுப்பதாக கூறி அதற்கு முன்பணமாக சீனிவாசனிடமிருந்து மேலும் ரூபாய் 15 லட்சம் பணம் பெற்றுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் விசாரித்துப் பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். எனவே, இதுசம்மந்தமாக சீனிவாசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி வழக்கின் குற்றவாளிகளான கேரள மாநிலத்தை சேர்ந்த குமரேசன் மகன் சியாம்(எ) ஜாய் மோகன்(44)மற்றும் அவரது மனைவியான சஜிதா(38) ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி வழக்கின் சொத்துக்களான இரிடியம், பணம் ரொக்கம் ரூ.4 லட்சத்து,99 ஆயிரம் மற்றும் தங்க நகைகள் சுமார் 77 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்..