போலி இ-மெயில் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடி – வடமாநில வாலிபர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாகுபுரத்தில் தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு தேவையான இல்மனைட் தாதுவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டுவர திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த ரசாயன உற்பத்தி நிறுவனமானது, திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயர் போன்றே வந்த இ-மெயிலில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.20 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், ரசாயன உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு மூலப்பொருட்கள் கொண்டுவர எங்களுக்கு பணம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரசாயன நிறுவனம் தங்களுக்கு வந்த இ-மெயில் ஐடி-யை சோதனை செய்தபோது அது திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இ-மெயில் ஐடி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்படி ரசாயன உற்பத்தி நிறுவனத்தின் பொதுமேலாளர் தேசிய சைபர் க்ரைமில் ஆன்லைனில் புகார் பதிவு செய்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகள் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார், தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த விஜேந்திரசிங் மகன் மோகித் பரிகார் (26) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மோகித் பரிகாரை கைது செய்த போலீசார், கடந்த 24.11.2024 அன்று தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் பணம் மோசடியில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீல் உதின் மகன் சமீல் உதின் (25) என்பவரை தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேசம் சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.