கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக யூடியூபில் பதிவேற்றம் செய்த விளம்பரத்தை நம்பி, அவரை தொடர்பு கொண்டு பேசி தனக்கு வீடு கட்டி தரும்படி கூறியுள்ளார். இதற்காக அவர் முன்பணம் தொகையாக குறிப்பிட்ட தொகை உதயகுமாரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தி உள்ளார். தொடர்ந்து உதயகுமார் செட்டிபாளையம் உள்ள ஆஷாவுக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு கட்டி தருவதாக முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு. வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஆஷா. இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உதயகுமார் பொள்ளாச்சி கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதே போன்று வீடு கட்டி தருவதாக ரூபாய் 40 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.