கோவை பீளமேடு, நேரு நகர் அருகே உள்ள மகாராஜா நகரை சேர்ந்தவர் விஷால் ( வயது 25 ) இன்ஜினியர்.கடந்த 9 – ந் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என்றும் மும்பையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். அத்துடன் உங்கள் முகவரியில் இருந்து ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைக்க ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதில் 4 காலாவதியான ஈரான் நாட்டு பாஸ்போர்ட், 3ஏடிஎம் கார்டுகள், 750 கிராம் போதை பொருட்கள் இருக்கிறது அதில் உங்கள் முகவரியும், உங்கள் செல்போன் என்னும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தான் அதை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். எனவே அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். மும்பை அலுவலகத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு விஷால் நான் யாருக்கும் எந்த பார்சலும் அனுப்பி வைக்கவில்லை. பின்னர் ஏன் வரவேண்டும்? என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் நீங்கள் விசாரணைக்கு வரவில்லை என்றால் உங்களை கைது செய்ய நேரிடும் என்று உள்ளார் .இந்த நிலையில் மீண்டும் வீடியோ காலில் பேசிய அந்த ஆசாமிகள் அவரது ஆதார் எண் ,வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கியுள்ளனர். எப்போது விசாரணைக்கு வருவீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு விஷால் தனக்கு தற்போது விடுமுறை இல்லை என்பதால் உடனடியாக வர முடியாது என்று கூறியுள்ளார். பின்னர் 2 நாள் கழித்து விஷாலின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ. 8 லட்சம் வங்கிக் வங்கிக் கடன் வாங்கி உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டபோது உங்கள் பெயரில் தான் கடன் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.. அப்போதுதான் சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி தனது பெயரில் மர்ம ஆசாமிகள் வங்கி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர் உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..