கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

கரூர் பரமத்தி நல்லி பளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி, நிர்மலா ஆகியோரின் மகன் பார்த்திபன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். படிப்பிற்காக கோவைக்கு வந்த பார்த்திபன் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தார். அவரிடம் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை தொழிலில் முதலீடு செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார். அதே நேரத்தில் பார்த்திபனுக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருந்தது அவரது மனைவிக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணத்திற்காக தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நாமக்கல்லை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அரசு அதிகாரி என கூறி திருமணம் செய்து அவரிடம் இருந்து நகை பணம் ஆகியவற்றை திரைப்படத்தின் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து அந்த இளம் பெண் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பார்த்திபன் சினிமா தயாரிப்பாளர் என்று கூறி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கினார். அதில் சினிமா எடுக்க போவதாக கூறி விளம்பரங்களை செய்தார். இதை நம்பி வந்த இளம் பெண்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் பணத்தை பறித்தார். பொள்ளாச்சியில் சில நாட்கள் மட்டுமே சினிமா சூட்டிங் நடத்தினார். அந்த நேரத்தில் உதவி செய்ய வந்த தஞ்சாவூர் சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி பழகி ஏமாற்றி உள்ளார் . இதற்கிடையே பார்த்திபன் கோவை காந்திபுரத்தில் பிரமாண்டமாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை துவக்கினார். அதில் சினிமா எடுக்கப் போவதாகவும் டி.வி சேனல் துவக்க போவதாகவும் கூறி தொழில் அதிபர்களை ஏமாற்றி பணத்தை வாங்கினார். அரசியல் கட்சி ஒன்றில் மாநில பொறுப்பை வாங்கிய பார்த்திபன் தான் அரசியல் பிரமுகர் என்றும் கூறி கொண்டு ஏராளமானவரிடம் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் தனக்கு தெரிந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் பணி புரிவதாக கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் மோசடி செய்தார். இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு சினிமா ஆசையில் வந்த இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பார்த்திபன் மீது கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து மோசடி புகார்கள் மற்றும் பெண்களை ஏமாற்றியது உள்ளிட்ட புகார்கள் பார்த்திபன் மீது குவியத் துவங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த பார்த்திபன் கடந்த 2022 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்து சரவணம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்றை துவக்கினார். இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி திருப்பூர் சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தார். மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக பார்த்திபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மசாஜ் சென்டரில் லாபம் கிடைக்கும் என முதலீடு செய்தவர்கள் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பார்த்திபன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . தொடர்ந்து கைது செய்யப்பட்டு பார்த்திபன் சிறையில் அடைக்கப்பட்டார். பார்த்திபன் தொடர்ந்து மோசடிகள் செய்து வருவதை அறிந்த அவரிடம் வேலை வாங்கி தருவதாக பணத்தை இழந்தவர்கள் சிறையில் இருந்து வெளி வந்த பார்த்திபனிடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர். ஆனால் பார்த்திபன் அவர்களை மிரட்டி உள்ளார். அதே போல பார்த்திபனிடம் பணத்தை இழந்த நபர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்க செல்லும் நேரத்தில் அவர்கள் மீது பார்த்திபனும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த கேரளாவை சேர்ந்த இளம் பெண்ணும் பொய் புகார்களை அளித்தனர். அதேபோல பார்த்திபனை கைது செய்ய சென்ற வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வீட்டிலிருந்து பணம் நகைகளை திருடி சென்றார் என்று வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து கோவை உடையாம்பாளையம் சேர்ந்த பரிமளா என்பவர் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஒன்றாம் தேதி பார்த்திபன் மீது புகார் அளித்தார். அதில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் போலீசார் கடந்த வாரம் பார்த்திபனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஈரோட்டைச் சேர்ந்த ராஜேஷ் மார்ட்டின் என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரில் பார்த்திபன் நடத்தி வந்த தீரா அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். ஈரோட்டில் உள்ள பலரிடம் மொத்தமாக 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது .புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ச்சியாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 17 வழக்குகள் பார்த்திபன் மீது கேரள மாநிலம் பாலக்காடு, தமிழ்நாட்டில் திருப்பூர் ,கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 8 வழக்குகள் பணம் ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக மோசடி புகார்கள் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தல், தொழிலதிபராக நடித்து பணம் பறித்தல் என செய்து வந்ததை அடுத்து பார்த்திபனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பார்த்திபனிடம் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.