தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நியூசிலாந்து நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் நல்ல சம்பளம் கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்த அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் அறிவிப்பை நம்பி பலர் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டனர். இதில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூபாய் 1 லட்சம் முதல் பணம் வசூலித்துள்ளார். மேலும் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார். இதை அடுத்து பணம் கொடுத்தவர்கள் வேலை கிடைத்துவிட்டதாக போலியாக கடிதம் தயாரித்து அனுப்பினார். மேலும் அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து அதன் நகலை அனுப்பி கூடுதலாக பணம் வசூலித்து வந்துள்ளார். பின்னர் விமான டிக்கெட் வந்ததால் பலரும் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி உள்ளனர். பின்னர் அவர் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனிடம் வேலைக்கு பணம் செலுத்திய மதுரை செல்லூரைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது வேலை கிடைக்காததால் கோவை வந்து விசாரித்து உள்ளார். அப்பொழுது தான் தமிழ்ச்செல்வன் மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவர் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதேபோல் 10 பேர் தமிழ்ச்செல்வன் மீது புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வன் தற்பொழுது 16 பேரிடம் மட்டும் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்துள்ளதும் மேலும் 44 பேரிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதை அடுத்து தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து பலரிடம் வாங்கி வைத்திருந்த 44 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர்.