பேருந்து முதல் மெட்ரோ ரயில் வரை… சென்னையில் வழக்கம் போல் போக்குவரத்து சேவை இயக்கம்..!

புயல்ரையை கடந்ததை நிலையில், சென்னையில் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்கள் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. வழக்கமாக இரவு 11 மணி வரையிலும் அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கம் : மாண்ட சுயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை சென்னை ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும் , சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும் இரு மார்க்கங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் மற்றும் பரங்கி மலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புயல் கரையை கடந்ததை நிலையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இயங்கத் தொடங்கியது.

அதேபோல புயல் கரையை கடந்த பின்னர், சென்னை மாநகரில் இரவு நேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. புயல் காரணமாக நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்த பின்னர், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதனை தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு 37 இரவு நேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின்னர், அதிகாலை 4 மணிக்கு மேல் வழக்கம் போல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

மின்சார ரயில் சேவைகளை பொறுத்தவரையில் மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது, சென்னை முழுக்க பலத்த சூறைக்காற்று வீசியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , ரயில்களின் இயக்கம் தொடர்பாக சிக்னல் கோளாறு உள்ளிட்ட ஏதேனும் பழுது தென்படும் பட்சத்தில் ரயில்களை நிறுத்தவும் அல்லது மாற்று நேரத்தில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு செல்லக்கூடிய கண்டெய்னர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நள்ளிரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள், பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசைக்கட்டி நின்றன.