கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லைகளில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறினாா்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 குவாரிகள் மட்டுமே அரசின் முறையான அனுமதி பெற்று செயல்படுவதாக கூறப்படுகிறது. அனுமதியில்லாமல் இயங்கும் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கனிமவளங்கள் கேரள மாநிலத்துக்கு தினமும் 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் கடத்தப்படுகிறது. எனவே, கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாக இருந்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.