நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முழுமுதற் கடவுளான யானை முகத்தான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி ஆகும்.

இந்நாளில் வீடுகளில் மண்ணால் ஆன விநாயகர் சிலை வைத்து, பிள்ளையாருக்கு உகந்த கொழுக்கட்டை, சுண்டல், மோதகம், பழங்கள், பொரி, அவல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை செய்வர். பின்னர் அந்த சிலைகளை ஆறு, ஏரி, குளங்கள் , சமுத்திரம் என நீர்நிலைகளில் கரைத்து வழிபடுவர். இதன்மூலம் மகிழ்ச்சி, ஆரோக்கியம் என செல்வங்களை வீட்டிற்கு கொண்டு வரும் விநாயகர், பின்னர் நமது துன்பங்கள் மற்றும் கஷ்டங்களை கொண்டு சென்று சிலை நீரில் கரைப்பது போன்று கரைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்திகொண்டாடப்படும் நிலையில், மகாரஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கோவா, ராஜஸ்தான், கர்நாடகா , ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிங்களில் பொது இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வர். சில மாநிலங்களில் இன்று தொடங்கி 17ம் தேதி வரை 10 நாட்கள் விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். தமிழகத்தில் சிலை வழிபாடு செய்து, 3வது நாள் அல்லது 5வது நாள் என வழிபாடு செய்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பர்.