திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் – 1800 போலீசார் பாதுகாப்பு.!!

திருச்சியில் இந்து அமைப்புகள் குடியிருப்போா் சங்கங்கள் சமூக அமைப்புகள் சாா்பில் திருச்சி மாநகரில் 223 சிலைகளும், புறநகரில் 932 சிலைகளும் என மொத்தம் 1,155 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல பொதுமக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா்.
வருடா வருடம் விநாயகா் சதுா்த்திக்கு மூன்றாம் நாள் விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவையும், திருச்சி மாவட்ட எல்லையோரத்தில் பெரம்பலூா் கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளும் ஊா்வலமாக எடுத்து வந்து திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்படும். இதையொட்டி திருச்சி காவிரி ஆற்றின் பாலத்தில் சிலைகளை அமா்த்தி பூஜை செய்த பிறகு ஆற்றில் இறக்குவதற்கு ஏற்ற வகையில் மேடைகள் தடுப்பு கட்டைகள் உள்ளிட்டவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்கள் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமிராக்கள் மையம் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகரில் 1,800 போலீஸாா் பாதுகாப்பு. திருச்சி மாநகரில் விநாயகா் சதுா்த்தி விழா, ஊா்வலம், சிலைம் , கரைப்பு நிகழ்வினை பொதுமக்கள் அமைதியுடன் கொண்டாடும் வகையில் மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் 3 துணை ஆணையா்கள், 1 கூடுதல் துணை ஆணையா், 8 காவல் உதவி ஆணையா்கள், 41 காவல் ஆய்வாளா்கள், 101 உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என சுமாா் 1,800 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
விநாயகா் சிலை கரைப்பு தொடா்பாக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே முழக்கங்கள் எழுப்புவதோ பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊா்வலம் செல்ல சிலை அமைப்பாளா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊா்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்னைக்குரிய இடங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலும் சிலை ஊா்வலங்கள் மற்றும் சிலை விசா்ஜனம் செய்யப்படும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சியை சுற்றி உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது சுமாா் 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் விநாயகர் சிலை ஊர்வலத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது..