தமிழக – கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாளையம் சாலை ஜே ஜே நகர் பகுதியில் நீண்ட நேரமாக டூரிஸ்ட் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று அங்கிருந்த மூன்று பேரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனில் சோதனை செய்த போது, அதில் இருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்டவர்களில் ஒருவர் கேரளவை சேர்ந்த சதீஷ்குமார் (34) தோட்ட வேலை செய்து வருகிறார். அவர், தமிழக கேரள எல்லையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் மீது கேரள மற்றும் தடாகம் காவல் நிலையங்களிலும் கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி, என்பவருடன் சேர்ந்து கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, டூரிஸ்ட் வேன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.