கோவை மாநகராட்சி அரசு பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள் அவதி – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?
கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள 31 வது வார்டில் மாநகராட்சி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக் கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். அதன் அருகே மாநகராட்சி பூங்காவும், காவல் நிலையமும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி பொது மக்களின் வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சி குப்பை வாகனங்கள் வீட்டு அருகே வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலை ஓரங்களில் போட்டு செல்கின்றனர். இதனை தடுக்க மாநகராட்சியின் ஊழியர்கள் சாலையில் குப்பை கொட்டுவார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி அருகே உள்ள சாலையில் வீடுகள் இல்லாததால் அப்பகுதியில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு
இதனை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.